யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் 38 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த சந்தைப் பெறுமதி கொண்ட வெளிநாட்டு கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், குருநகர் களப்புப் பகுதியில் இன்று (24 செப்டம்பர் 2026) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சுமார் 192 கிலோகிராமுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா தொகையுடன் டிங்கி படகு (01) ஒன்று மற்றும் சந்தேகநபர் (01) ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம், குருநகர் களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அக்களப்புப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு (01) ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அப்படகினுள் 07 உரைகளில், 88 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 192 கிலோகிராமுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா தொகையுடன் டிங்கி படக்கொன்று (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதல் நடவடிக்கையின் மூலம் சந்தேகநபர் (01) ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகையின் மொத்த சந்தைப் பெறுமதி 38 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என நம்பப்படுவதுடன், குறித்த வெளிநாட்டு கஞ்சா தொகை, சந்தேகநபர் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.