வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் மூதூரில் கைது செய்யப்பட்டுள்ளார்
2026 செப்டம்பர் 09 அன்று மூதூர் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பெரகும்பா நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை கப்பல் கோகண்ன நிறுவனத்துடன் இணைந்து மூதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கு இடமான லொறி ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 820 கிலோகிராம் எடை கொண்ட மீன் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய, பொடுவைகட்டு செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்; குறித்த சந்தேக நபர், லொறி மற்றும் மீன் தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மூதூர் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.