Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

SLINEX-26 இருதரப்பு கடற்படைப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

22 Sep 2026

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடைபெறும் இருதரப்பு கடற்படைப் பயிற்சித் தொடரின் 13ஆவது கட்டமான SLINEX-26 கடற்படைப் பயிற்சி, இருநாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, 2026 செப்டம்பர் 21ஆம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான பரஸ்பர தொடர்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதையும், செயல்பாட்டு முறைகளைப் பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தியக் கடற்படையின் கிழக்குக் கடற்படைப் பிரிவின் செயல்பாட்டுக் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக் கடற்படை கப்பல் சிதுரல' பங்கேற்றதுடன், இந்தியக் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பலான INS Kavaratti மற்றும் கடற்படைக்கான எரிபொருள் விநியோகக் கப்பலான INS Jyoti ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.

இந்தப் பயிற்சி துறைமுகக் கட்டம் மற்றும் கடல் கட்டம் என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்தியாவின் விசாகப்பட்டினத் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற துறைமுகக் கட்டத்தின் போது, இருநாட்டுக் கடற்படை வீரர்களுக்கிடையிலான தொழில்முறைச் கலந்தரையாடல்கள், கப்பல் பார்வையிடல் விஜயங்கள், துறைசார் நிபுணர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டுச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடத்தப்பட்டன. இச்செயல்பாடுகளின் மூலம் இருநாட்டுக் கடற்படை வீரர்களும் தங்களது செயல்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தொழில்முறை மற்றும் நட்பு ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பிற்கு அப்பால் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் கடல் கட்டத்தின் போது, செயல்பாட்டுத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புத் திறனைப் பரிசோதிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு சிக்கலான கடற்படைச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்பரப்பு இலக்குகள் மீதான ஆயுதப் பயிற்சிகள், கப்பல் உத்திசார் நுட்பப் பயிற்சிகள், கடற்கொள்ளைச் சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் பயிற்சிகள் மற்றும் கப்பல்களுக்கு இடையிலான ஹெலிகொப்டர் செயல்பாடுகள் ஆகியவை கடல் கட்டத்தில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டன.

இச்செயல்பாடுகளின் மூலம் பல்வேறு கடற்படைச் செயல்பாட்டுச் சூழல்களில் இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து செயல்படும் திறனையும், ஒருவரையொருவர் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த புரிதலையும் மேம்படுத்த முடிந்தது. SLINEX-26 கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பான, அமைதியான மற்றும் நிலையான கடற் சூழலைப் பேணுவதற்கான பொதுவான அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கிய கடல்சார் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இருநாடுகளின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் வலியுறுத்தப்பட்டது.

Accessibility Tools