புத்தளம் கங்கேவாடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 821 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், புத்தளம் கங்கேவாடிய கலப்புப் பகுதி மற்றும் சேரக்குளிய கடற்கரைப் பகுதிகளில் 2026 செப்டம்பர் 21 ஆம் திகதி இரவு வேளையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் எண்ணூற்று இருபத்தி ஒன்று (821) கிலோகிராம் பீடி இலைத் தொகுதியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் இரண்டு (02) டிங்கி படகுகளையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கங்கேவாடிய இப்பன்தீவு கலப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று (01) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 10 பீடி இலை மூட்டைகளைக் கொண்டிருந்த அப்படகும், அதிலிருந்த கற்பிட்டி-ஆனவாசலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 36 வயதுடைய இரண்டு (02) சந்தேக நபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதல் நடவடிக்கையின் மூலம், கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடத்தல்காரர்களால் அக்கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 12 பீடி இலை மூட்டைகளைக் கொண்ட மற்றுமொரு டிங்கி படகையும் கடற்படையினர் பொறுப்பேற்றனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் பீடி இலைத் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.