வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் கடற்படையின் செயற்பாடுகளைப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் பாதுகாப்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்தும் வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இலங்கை கடற்படையினால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான செயற்பாடுகளைப் பார்வையிடும் நோக்கில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ உடன் ஒக்டோபர் 20 அன்று காலி, பெட்டிகலவத்த ஆயுதக் களஞ்சிய வளாகத்திற்கு விஜயம் செய்தார்.
இவ்வளாகம், வர்த்தகக் கப்பல்களில் பாதுகாப்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாக செயற்படுகிறது.
வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல்களில் பாதுகாப்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கான வசதிகளை வழங்கும் (Onboard Security Team – OBST) நடவடிக்கைகளை இலங்கை கடற்படை சுயாதீனமாக முன்னெடுக்கும் செயற்பாட்டை 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி ஆரம்பித்தது.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், சுமார் 3.32 மில்லியன் அமெரிக்க டொலர் (ஏறத்தாழ 106 கோடி இலங்கை ரூபா) வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை நாட்டின் பொருளாதாரத்திற்கு ஈட்டிக்கொடுக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகளின் ஊடாக, தற்போது 10 உள்நாட்டு முகவர்களின் மூலம் 28 வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்கள், தமது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகளையும் சேவைகளையும் இலங்கை கடற்படையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன.
காலி, பெட்டிகலவத்த ஆயுதக் களஞ்சிய வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது, வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்குவதில் இலங்கை கடற்படை ஆற்றிவரும் பங்களிப்பு மற்றும் அச்செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆராய்ந்தார்.
கடற்படையினால் இச்செயற்பாடுகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் அதிக எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட பங்களிப்பை பாதுகாப்புப் பிரதி அமைச்சர் பாராட்டினார்.
மேலும், இச்செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார்.
ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே. எம். விஜேபண்டார, பாதுகாப்பு அமைச்சின் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) மேலதிக செயலாளர் திருமதி இந்திகா விஜேகுணவர்தன மற்றும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோறும் இந்ந விஜயத்தில் கலந்துகொண்டனர்.
ஊடக ஆதரவு - www.defence.lk













