யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 8 வது கேனோ ஸ்பிரிண்ட் போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது
தேசிய படகோட்டம் மற்றும் கயாக்கிங் சங்கத்தினால் (National Association of Canoe and Kayaking in Sri Lanka - NACKSL) ஏற்பாடு செய்யப்பட்ட 8வது கேனோ ஸ்பிரிண்ட் தேசிய போட்டித்தொடர், முதன்முறையாக 2024 செப்டம்பர் 14 முதல் 16 வரை யாழ்ப்பாணக் கோட்டை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை இராணுவமும் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படையும் வென்றது.
வடமாகாணத்தில் நீர் விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை, தேசிய படகோட்டுதல் மற்றும் கயாக்கிங் சங்கம் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த இந்த போட்டித்தொடர், அப்பகுதியில் உள்ள நீர் விளையாட்டு ஆர்வாலர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியதுடன், வட மாகாண சபையும் மாகாண கல்வி அமைச்சும் அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்கியது.
குறிப்பாக, உள்ளூர் பாடசாலைகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டித்தொடருடன் இணைந்து நடத்தப்பட்ட டிராகன் படகுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பியன்ஷிப் இரண்டையும் நெடுந்தீவு மத்திய கல்லுரி வென்றது.
இந்நிகழ்வுக்காக வடமாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா, தேசிய படகு மற்றும் கயாக்கிங் சங்கத்தின் தலைவரும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், இலங்கை இராணுவ கயாக்கிங் குழுவின் தளபதி நாயகம் மேஜர் ஜெனரல் துஷார மஹலேகம், இலங்கை விமானப்படை கயாக்கிங் குழுவின் தளபதி எயார் கொமடோர் அசித ஹெட்டியாராச்சி, வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ஜயந்த பண்டார, யாழ் மாவட்ட பிரதிப் பரிசோதகர் கலிங்க ஜயசிங்க, வேலணை பிரதேச செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான விளையாட்டு ஆர்வாலர்களும் கலந்து கொண்டனர்.