சுமார் 82 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, பிடிபன பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 09 அன்று நீர்கொழும்பின், பிடிபன பகுதியிலும் கொழும்பின் கெசல்வத்த பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று ஐந்து (205) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு (958) கிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு (01) லொரி மற்றும் ஒரு (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, 2025 ஏப்ரல் 09ஆம் திகதி அன்று நீர்கொழும்பு, பிடிபன பகுதியில் துன்கல்பிட்டி காவல்துறையுடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குளிர்சாதன பெட்டி லொரியை சோதனை செய்தனர். அங்கு லொரியிலிருந்த குளிர்சாதன பெட்டியில் ஐந்து (05) பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் நூற்று எண்பத்தேழு (187) கிலோ மற்றும் எண்ணூற்று எழுபத்தைந்து (875) கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் குறித்த லொரியையும் கைது செய்தனர்.

மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் வாகனம், துன்கல்பிட்டி காவல்துறையினருடன் இணைந்து கொழும்பின் கெசல்வத்த பகுதியில் சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு, குறித்த மோட்டார் வாகனத்தில் ஒன்பது (09) பார்சல்களில் அடைக்கப்பட்ட பதினெட்டு (18) கிலோகிராம் எண்பத்து மூன்று (83) கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த மோட்டார் வாகனமும் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி எண்பத்திரண்டு (82) மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேக நபர்கள், கேரள கஞ்சா தொகை, லொரி மற்றும் மோட்டார் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துன்கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.