இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் வைத்து கைது

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து இன்று (2024 டிசம்பர் 08) யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்பகுதியில் மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி அதிகாலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்றை குறித்த கட்டளையின் கடற்படை மற்றும் கடலோரக் காவல் திணைக்களத்தின் துரித தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு (08) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளும், எட்டு (08) இந்திய மீனவர்களும் காங்கேசந்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கை உட்பட, 2024 ஆம் ஆண்டில் இதுவரை, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எழுபது (70) இந்திய மீன்பிடி படகுகளும், ஐந்நூற்று முப்பத்தேழு (537) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.