இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கில் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2024 டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்றை வடக்கு மற்றும் வட மத்திய கட்டளையின் துரித தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் இவ்வாரு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் படகில் இருந்த பதினான்கு (14) இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
மேலும், இந்த நடவடிக்கை உட்பட, 2024 ஆம் ஆண்டில் இதுவரை, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அறுபத்தெட்டு (68) இந்திய மீன்பிடி படகுகளும், ஐந்நூற்று இருபத்தி ஒன்பது (529) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.