இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3380 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பெருமளவு ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), இலங்கை மீன்பிடி படகு (01)மற்றும் சந்தேக நபர்கள் இன்று (02 டிசம்பர் 2024) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கஜபாகு கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் குறித்த போதைப்பொருள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம்.ஆனந்த் அவர்களும் கலந்துகொண்டார்.

இலங்கை கடற்படை, பிராந்திய கடற்படைகள் மற்றும் கடல்சார் பங்குதாரர்களுடன் இணைந்து, புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் கடல் பிராந்தியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறது.

அதன்படி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்ற பல நாள் மீன்பிடி கப்பல்கள் குறித்து இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையே நடந்த வெற்றிகரமான உளவுத்துறை பரிமாற்றத்தின் விளைவாக, இந்திய கடற்படையினர் 2024 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் அரபிக்கடலில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை யொன்றை மேற்கொண்டனர். அங்கு பெருமளவு ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) கொண்ட இலங்கையின் பல நாள் மீன்பிடிப் படகுடன் ஆறு (06) இலங்கை சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகப்படுகின்ற மற்றுமொரு இலங்கையின் பல நாள் படகுடன் ஐந்து இலங்கை சந்தேக நபர்கள் (05) இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2024 நவம்பர் 29 ஆம் திகதி குறித்த போதைப்பொருள், பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு கொண்டு வர இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுயிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தேவுந்தர, கந்தர மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றைய படகில் இருந்த சந்தேக நபர்கள் 32 முதல் 54 வயதுக்குட்பட்ட தேவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக சோதனையின் போது 295 பிளாஸ்டிக் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பின் எடை 355 கிலோ 828 கிராம் என தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருளின் மொத்த பெறுமதி 3380 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது, குறித்த போதைப்பொருள், பலநாள் மீன்பிடி படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படைக்கும் மாலைதீவுக் கடலோரக் காவல்படைக்கும் இடையிலான இதேபோன்ற வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, 344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 124 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கையின் பல நாள் மீன்பிடி படகொன்று மற்றும் இலங்கையில் ஐந்து சந்தேக நபர்கள் (05) 2024 நவம்பர் 23 ஆம் திகதி மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், மீன்பிடித் தொழில் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய பிராந்திய கடல்சார் பங்குதாரர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது.