தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த இந்திய மீன்பிடிப் படகை மீட்க கடற்படையின் உதவி
இயந்திரக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் உதவினர். 2024 செப்டம்பர் 22 அன்று படகை பரிசோதித்த பிறகு, பழுதுபார்க்கப்பட்டு குறித்த இழுவைப் படகு அதன் 05 பணியாளர்களுடன், 2024 செப்டம்பர் 23 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் இருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
2024 செப்டெம்பர் 22ஆம் திகதி கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி இழுவை படகு ஒன்று மிதந்து செல்வதை வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டது. அதன் படி குறித்த கட்டளையின் கடலோரக் காவல் திணைக்களத்தின் விரைவுத் தாக்குதல் படகுகள் மற்றும் கடற்படையின் விரைவுத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப் படகை ஆய்வு செய்தபோது, இந்தியாவின் கன்னியாகுமாரியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த மீன்பிடிப் படகு இந்தியாவின் விசாகப்பட்டினத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணத்தினால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐந்து (05) பேருடன் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவித்ததையடுத்து, மேலதிக பரிசோதனைக்காக கடற்படையினர் மீன்பிடிப் படகை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அதன்படி, குறித்த கப்பலில் இருந்த சுக்கான் தண்டு தாங்கி குறைபாடு (Rudder Shaft Bearing Defective), வடக்கு கடற்படை கட்டளை பொறியியல் துறையால் சரி செய்யப்பட்டு 2024 செப்டம்பர் 23 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
கடல்சார் மற்றும் மீனவ சமூகங்கள் மற்றும் கடலில் ஆபத்தில் உள்ள கப்பல்களுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் சர்வதேச கடமைகளை நிறைவேற்ற இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தொடர்ந்து தயாராக உள்ளன.