35470 போதை மாத்திரைகள் புத்தளத்தில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், 2024 செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி மாலையில் புத்தளம், சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்தைந்தாயிரத்து நானூற்று எழுபது (35470) Pregabalin போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்தின் கடற்படையினர் வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டில் சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) கொள்கலன்களை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் அடைத்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முப்பத்தைந்து ஆயிரத்து நானூற்று எழுபது (35470) போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 136,798 சட்டவிரோத போதை மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.