இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது.
இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கில் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்று கட்டளையின் கடலோர ரோந்து படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு மன்னாருக்கு வடக்கில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் எட்டு இந்திய மீனவர்கள் (08) தலைமன்னாரத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையுடன் 2024 ஆம் ஆண்டில் இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நாற்பத்தாறு (46) இந்திய மீன்பிடிக் படகுகள் மற்றும் முந்நூற்று நாற்பத்தொரு (341) இந்திய மீனவர்கள், கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.