வடக்கு கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதால் மூழ்கிய இந்திய மீன்பிடி படகில் இருந்து 2024 ஜூலை 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு (02) மீனவர்கள் மற்றும் சிகிச்சைக்காக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஒரு (01) மீனவரின் உடல் இலங்கை கடலோரக் காவல்படையினரால் இந்திய கடற்படைக் கப்பலான 'INS BITRA' க்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடிக் படகுகளை அவதானித்த கடற்படையினர், 2024 ஜூலை 31 ஆம் திகதி இரவு கடற்படை கப்பல்களை அனுப்பி குறத்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அங்கு, பல சட்டவிரோத மீன்பிடி படகுகள் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடற்படை உத்தரவுகளுக்கு எதிராக (Aggressive Manoeuvre) கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையின் கப்பலுடன் மோதி, முன்னோக்கிச் சென்று, சில நிமிடங்களின் பின்னர் கவிழ்ந்து மூழ்குவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
அங்கு விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடி படகில் இருந்த நான்கு (04) மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுத்த கடற்படையினர், மூழ்கிய படகுக்கு உயிர்காக்கும் கருவிகளை செலுத்தி மூன்று மீனவர்களை வெற்றிகரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதால், கடற்படையினர் குறித்த மீனவரின் உயிரைக் காப்பாற்ற அக் கடல் பகுதிக்கு அருகில் உள்ள புங்குடுதீவு வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் ஆனால் அவர் அனுமதிக்கப்பட்டபோதும் இறந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், மற்றைய மீனவர் கடலில் காணாமல் போயுள்ளார். காணாமல் போன மீனவரை (01) கண்டுபிடிக்க கடற்படையினர் நெடுந்தீவு கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் இந்திய கடலோர காவல்படையும் இணைந்தது.
கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு (02) மீனவர்களும், உயிரிழந்த இந்திய மீனவரின் உடலும், மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படையினரால், இந்திய கடற்படை கப்பலான 'INS BITRA' க்கு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைக்கப்பட்டது.