காலி, வக்வெல்ல பாலத்தில் தேங்கிய கழிவுகளை அகற்ற கடற்படையின் பங்களிப்பு
கிங்தொட்ட பகுதியூடாக கடலுக்கு செல்லும் கிங் ஆற்றின் வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் கடும் மழையுடன் அடித்துச் செல்லப்படும் கழிவுகளால் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு கடற்படையினர் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருவதுடன், 2024 ஜூன் 19 ஆம் திகதி மற்றுமொரு கழிவு அகற்றும் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.
கிங் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஆற்றங்கரையோரப் பகுதியில் அலட்சியமாக கொட்டப்படும் குப்பை, வெட்டப்பட்ட மரங்கள், மூங்கில் புதர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, குறுகிய பாலத்தில் சிக்கிக் கொள்கின்றன. மேலும் தண்ணீர் படிப்படியாக உயர்வதால், கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது.
நிலைமையின் அவசரத்தை உணர்ந்த இலங்கை கடற்படை உதவிக்கான அழைப்புக்கு உடனடியாக பதிலளித்து தெற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தில் இணைக்கப்பட்ட கடற்படை நீர்மூழ்கிக் குழுவினர் மற்றும் விரைவுப் பதிலளிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு - 4RU பணியாளர்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டு, தண்ணீர் சீராக வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.