சுமார் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது
இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 ஜுன் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அறுபது (60) கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான பருத்தித்துறை கடற்படை இணைப்பின் கடற்படையினர் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் 2024 ஜூன் மாதம் 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஒருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார். மேலும் சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட 60 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் மொத்த வீதி பெறுமதி இருபத்து நான்கு (24) மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் தாளையடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.