வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக சிறிய படகுகள் மூலம் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, காலி மாவட்டத்தில் தவலம மற்றும் நாகொட, மாத்தறை மாவட்டத்தில் மாலிம்படை, பனாத்துகம, கம்புருபிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தனுவர, புலத்சிங்கல, இங்கிரிய மற்றும் வெலிப்பன்ன, கொழும்பு மாவட்டத்தில் கடுவெல, மீத்தோட்டமுல்ல, கொலன்னாவ, புவக்பிட்டிய, இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீட்பதற்காக இன்று (2024 ஜூன் 02,) சிறிய படகுகளைப் பயன்படுத்தி அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இருபத்தி ஒன்பது (29) நிவாரணக் குழுக்களை அந்தப் பகுதிகளுக்கு அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறுபது (60) பேரை பாதுகாப்பாக மீட்கும் பணியும், இருநூற்று ஐம்பது (250) பேருக்கு சமைத்த உணவு வழங்கும் பணியும் இன்று (2024 ஜூன் 02,) காலை முதல் கடற்படை நிவாரணக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க கடற்படையால் கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.