சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் நாகர்கோவில் பிரதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் 2024 மார்ச் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் நாகர்கோவில் கடற்பரப்புகளில் வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தின் கடற்படையினரால் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு, குறித்த கடற்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மூன்று (03) படகுகளை கண்காணித்து பரிசோதித்த போது, சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) பேருடன் குறித்த மூன்று (03) படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்களான ஒன்பது (09) பேர், மூன்று (03) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.