பழுதடைந்த பேராறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகளை சரிசெய்வதற்கு கடற்படையின் உதவி
பேராறு நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த வான்கதவுகளை சரிசெய்வதற்காக இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் நபர்கள் 2023 டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அர்ப்பணிப்பு பணியை மேற்கொண்டனர். வவுனியா மாவட்டத்தின் பேராறு குளம் பகுதியில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினால் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் வழங்கல் சபையின் கீழ் இயங்கிவரும் பேராறு நீர்த்தேக்கத்தின் கதவுகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை மீளமைக்க கடற்படையினர் உதவி வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த சுழியோடி குழுவினால் இந்த நீர்மூழ்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, நீர்த்தேக்கத்தின் செயலிழந்த வான் கதவுகள் மற்றும் மண் வடிகால்களை சரிசெய்வதற்கு கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றின் செயல்பாட்டை வெற்றிகரமாக மீட்டெடுத்தனர்.
மேலும், இதுபோன்ற அவசரகால சூழ்நிலையில் தனது தொழில்முறை பங்களிப்பை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.