போதைப்பொருள் கடத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் 05 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது
2023 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பதினைந்து (15) மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.
சட்டத்தை அமுல்படுத்தும் முகவர் நிலையங்களுக்கு சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றது. இதன்படி, கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் உத்தர மற்றும் வேலுசுமன நிருவனங்களின் கடற்படையினர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஆகஸ்ட் 29 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த கெப் வண்டியொன்றை சோதனையிட்டனர். அப்போது போதைப்பொருள் கடத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 2023 ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை, யாழ்ப்பாணம், உரும்பிராய் மற்றும் மாதகல் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) மற்றும் பதினைந்து (15) மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட மாதகல், உரும்பிராய் மற்றும் ஊவ குடாஓய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கெப் வண்டி, சந்தேகநபர்கள் ஐவர், மோட்டார் சைக்கிள் மற்றும் பதினைந்து (15) மில்லியன் ரூபா பணம் தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.