தெற்கு கடற்பரப்பில் தீப்பிடித்த உள்நாட்டு மீன்பிடி படகில் இருந்த 07 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
காலி கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 58 கடல் மைல் (சுமார் 107 கி.மீ) தொலைவில் இலங்கைக்கு மேற்கு ஆழ்கடலில் தீப்பிடித்த பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொன்டுள்ளனர். குறித்த மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஏழு (07) இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படை கப்பல் கஜபாகு மூலம் இன்று (2023 ஆகஸ்ட் 12) காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
'ருஹுனு குமாரி 6' (IMUL-A-0738-CHW) என்ற பல நாள் மீன்பிடிப் படகு ஏழு (07) மீனவர்களை ஏற்றிக்கொண்டு 2023 ஆகஸ்ட் 08 ஆம் திகதி வென்னப்புவ பகுதியிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு மேற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போது தீப்பிடித்துள்ளதுடன் குறித்த தீ விபத்தை அவதானித்த 'MT SAIQ' என்ற வணிகக் கப்பல் தீ விபத்து தொடர்பில் கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, உடனடியாக நடவடிக்கை எடுத்த கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகு மீன்பிடிக் கப்பல் தீப்பிடித்த கடல் பகுதிக்கு நிவாரணம் வழங்க உடனடியாக அனுப்பியது. கஜபாகு கப்பல் வரும் வரை கப்பலில் இருந்த மீனவர்களை மீட்க ‘MV AFRICAN TURACO’ வணிகக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், MV AFRICAN TURACO’ என்ற வணிகக் கப்பலால் பத்திரமாக மீட்கப்பட்ட மீனவர்கள், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான முதலுதவி அளித்து இன்று (ஆகஸ்ட் 12, 2023) காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.
மேலும், கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பகுதியில் துயரத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க இலங்கை கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது.