கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பிலும் கிண்ணியா பாலத்தை சூழவுள்ள பகுதியிலும் மின் விளக்குகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நபர்களை அடையாளம் காண விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை இலங்கை கடற்படையினர் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டனர். குறித்த நடவடிக்கையின் போது இருபத்தி இரண்டு (22) சந்தேகநபர்கள் மற்றும் எட்டு (08) டிங்கி படகுகள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி காலை, கிழக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டாபய நிறுவனத்திற்குச் சொந்தமான நாயாறு கடற்படைப் பிரிவின் விரைவு நடவடிக்கைப் படகுகள் படையணியின் கடற்படையினர் முல்லைத்தீவு உதவி மீன்பிடி பரிசோதக நிருவனத்துடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அப்போது குறித்த கடல் பகுதியில் சட்டவிரோத மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கோகண்ண மற்றும் பரகும்பா ஆகிய நிருவனங்களின் கடற்படையினர் திருகோணமலை உதவி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்துடன் இணைந்து கிண்ணியா பாலத்தை சுற்றியுள்ள களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவில் சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 நபர்கள், ஐந்து (05) படகுகள் மற்றும் சுழியோடி கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, கிண்ணியா மற்றும் சீனக்குடாவைச் சேர்ந்த 29 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நபர்கள், படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.