சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த 23 இலங்கையர்கள் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலொன்று கடந்த 2022 நவம்பர் 07 ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலம் உடனடியாக காப்பாற்றப்பட்ட பின் வியட்நாமில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 151 இலங்கையர்கள் 2022 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன், தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருபத்திமூன்று (23) இலங்கையர்கள் 2023 ஏப்ரல் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தனர்.
303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் Lady R3' என்ற மீன்பிடிக் கப்பல் வியட்நாம் கடலில் மூழ்கி வருவதாக 2022 நவம்பர் 07, அன்று காலை கடற்படைத் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடனடியாக செயற்பட்டு, கப்பலில் இருந்த இலங்கையர்களை மீட்பதற்காக, கப்பல் உள்ள கடற்பகுதியை உள்ளடக்கும் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு தகவல் அறிவித்தது.
அதன்படி, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களின் ஒருங்கிணைப்புடன், MV ‘Helios Leader’ என்ற வணிகக் கப்பலின் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்டு, அவர்கள் 2022 நவம்பர் 9, அன்று வியட்நாமிய தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலொன்று மூலம் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்கள் சட்டப்பூர்வமாக இலங்கையிலிருந்து மியான்மருக்குச் சென்றதாகவும், சர்வதேச மனிதக் கடத்தல்காரர்களின் உதவியுடன் அங்கிருந்து சட்டவிரோத கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடியேறும் முயற்சியில் ஈடுபட்ட போது 2022 நவம்பர் 07 ஆம் திகதி வியட்நாம் கடலில் பாதிக்கப்பட்டதாகவும் இதுவரை தெரியவந்துள்ளது.
2023 ஏப்ரல் 19 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குழுவில் 19 முதல் 50 வயதுக்குட்பட்ட 15 ஆண்களும் 06 பெண்களும் 18 வயதுக்குட்பட்ட 02 நபர்களும் அடங்குவர். அவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், நாட்டின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் மட்டுமன்றி, அண்மித்த பகுதிகளிலும் ஆபத்தில் உள்ளவர்களை மீட்பதில் கடற்படையினர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.