58 வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
2023 மார்ச் 18 ஆம் திகதி திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 58 வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்கள் மற்றும் 100 டெட்டனேட்டர்களுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபடுன, கோகன்ன, பரகும்பா மற்றும் கடற்படை கப்பல்துறையின் கடற்படையினர் இணைந்து மேற்கொண்டுள்ள புலனாய்வு நடவடிக்கையில் இருந்து கிடைத்த தகவலின்படி, திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் 2023 மார்ச் மாதம் 18 ஆம் திகதி திருகோணமலை பொலிஸாருடன் இனைந்து விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. அங்கு சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்று சோதனையின் போது, குறித்த முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட வாட்டர் ஜெல் எனப்படும் 58 வர்த்தக வெடிபொருட்கள், 100 டெட்டனேட்டர்களுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வணிக வெடிபொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வெடிபொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.