சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1128 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரவு புத்தளம், முக்குதொடுவாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 1128 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் லொறி வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரவு புத்தளம், முக்குதொடுவாவ கடற்பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு சொந்தமான உடப்புவ கடற்படை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியொன்றை (Freezer Truck) சோதனை செய்தனர். அங்கு, லொறியில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்காக முப்பத்தாறு (36) பைகளில் பொதி செய்யப்பட்ட 1128 கிலோ 300 கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருபது (20) பைகளில் பொதி செய்யப்பட்ட 503 கிலோ கொத்தமல்லியும், நான்கு (04) பைகளில் பொதி செய்யப்பட்ட 99 கிலோ 100 கிராம் காய்ந்த மிளகாய்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், லொறி, பீடி இலைகள், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.