சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற 38 இலங்கையர்கள் விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் 2023 ஜனவரி 25 ஆம் திகதி மாலை விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ரீயூனியன் தீவின் பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2022 டிசம்பர் 01 ஆம் திகதி ஐந்து (05) பணியாளர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இல. IMUL-A-0532 CHW என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுக்கு 2022 டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம், பத்தலங்குண்டுவ தீவில் இருந்து 03 டிங்கி படகுகளைப் பயன்படுத்தி 64 பேர் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர், இந்த சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் செல்லும் பல நாள் மீன்பிடி கப்பல் முதலில் பிரித்தானியாவுக்குச் சொந்தமான டியாகோ கார்சியாவிற்குள் நுழைய முயன்ற போது 2022 டிசம்பர் 30 ஆம் திகதி பிரித்தானியா கடற்படையினர் இந்தக் குழுவைக் கைது செய்து மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர், மனித கடத்தல்காரர்களால் இந்த இலங்கையர்களை பிரெஞ்சு தீவான ரீ-யூனியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் 2023 ஜனவரி 14 ஆம் திகதி ரீ-யூனியன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரீ-யூனியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் 38 பேர் 2023 ஜனவரி 25 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்வாரு இலங்கைக்கு அனுப்பப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலின் பணியாளர்கள் மூவர் (03) உட்பட 18 வயதுக்கு மேற்பட்ட 33 ஆண்கள், இரண்டு பெண்கள் (02) மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் (02) மற்றும் ஒரு பெண் (01) ஆகிய 38 இலங்கையர்களும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹ ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலை நடத்திய கல்பிட்டி மற்றும் கண்டி பிரதேசங்களில் வசிக்கும் ஆட்கடத்தல்காரர்கள் ஒருவரிடம் இருந்து 400,000.00 முதல் 1,000,000.00.00 ரூபாய் வரை பணம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்கின்ற மனித கடத்தல்களில் சிக்கி உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், இவ்வாரான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரீ-யூனியன் தீவுக்குள் நுழைவதுக்கு பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவும் வழங்கப்படாது, மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக திருப்பி இந் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.