16 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இன்று (2023 ஜனவரி 25) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 49 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) மூன்று சந்தேகநபர்கள் (03) மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றினர்.
கடல் வழிகளாக நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவகத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டதுடன் அங்கு, 20 கிலோ 900 கிராம் (ஈரமான எடை) கொண்ட 09 பார்சல்களில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களும் (03) குறித்த டிங்கி படகும் கைப்பற்றப்பட்டன.
மேலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரணவிஜய கப்பல் அந்த கடற்பகுதியில் மேற்கொண்ட மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருந்த மற்றுமொரு சாக்கு மூட்டையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 11 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 29 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று (03) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மண்டைதீவு, மற்றும் தாளையடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, டிங்கி படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.