கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து வடக்கு கடலில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது 137 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவின் தென்கிழக்கு கடல் பகுதியில் இன்று (2022 நவம்பர் 09) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 458 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றை இலங்கை கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை மற்றும் கடலோர காவல்படை திணைக்களம் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை நடத்துகின்றன.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான CG 402 என்ற கரையோர பாதுகாப்புக் கப்பலைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் நெடுந்தீவின் தென்கிழக்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டது. அங்கு, 18 பார்சல்களில் பொதி செய்யப்பட்ட சுமார் 458 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு சந்தேக நபர்களும் (02) டிங்கி படகொன்றும் இலங்கை கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு 137 மில்லியன் ரூபாய் என நம்பப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 37 மற்றும் 44 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் (02) மண்டைதீவு மற்றும் நச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
மேலும், 2022 ஆம் ஆண்டில் இது வரை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 5479 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது, இதன் மொத்த வீதி மதிப்பு ரூ. 1643 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.