சுமார் 166 மில்லியன் ரூபா வீதி பெறுமதியான 08 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து 2022 நவம்பர் 07 ஆம் திகதி பேருவளை, டயஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள தோட்டமொன்றில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிலோ 304 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார். இதன் வீதி பெறுமதி 166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, கடற்படை புலனாய்வுப் பிரிவு மற்றும் ஹிக்கடுவ பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து 2022 நவம்பர் 07 ஆம் திகதி மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது பேருவளை, டயஸ்வத்தை பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிடப்பட்டதுடன் அங்கு, அந்த வீட்டின் தோட்டத்தில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிலோ 304 கிராம் ஹெரோயின் அடங்கிய 07 பார்சல்களுடன் சந்தேகநபர் (01) ஒருவர் இவ்வாரு கைது செய்யப்பட்டார்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த வீதி பெறுமதி சுமார் 166 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.
இந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை, டயஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபரும் ஹெரோயின் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து ஹம்பாந்தோட்டை மகா ராவணா கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் தென் கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையொன்று மூலம் கைப்பற்றி 2022 நவம்பர் 07 ஆம் திகதி காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 6622 மில்லியன் ரூபா தொடக்கம் 13244 மில்லியன் ரூபா வீதி பெறுமதி கொண்ட 331 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பேருவளையில் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளுடன், இலங்கை கடற்படையினர் 2022 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் மூலம் 23.29 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப்பொருளைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய அபிலாஷையை அடைவதற்காக, இலங்கை கடற்படை நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து இத்தகைய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கும்.