தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் மிதந்த இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்தடைந்த இந்திய மீன்பிடிப் படகொன்று பருத்தித்துறையில் இருந்து 26 கடல் மைல் (சுமார் 48 கிமீ) தொலைவில் வடக்கு கடற்பரப்பில் உள்ளதை இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டதுடன் குறித்த படகுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கி சர்வதேச கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டு இந்திய கடலோர காவல்படையின் எனீ பெசன்ட் (ICGS Annie Besant) கப்பலிடம் இன்று காலை (2022 செப்டம்பர் 28) இலங்கை கடற்படையால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து 2022 செப்டம்பர் 25 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுள்ள இந்தியப் பல நாள் மீன்பிடிக் படகு பைரவகாளி, Bairavakali இயந்திரக் கோளாறு காரணமாக 2022 செப்டம்பர் 27 ஆம் திகதி பிற்பகலில் இருந்து இலங்கைக் கடற்கரையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன் இந்தியாவின் சென்னையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கொழும்பில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் உதவி கோரியுள்ளது.
குறித்த கோரிக்கையுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான நான்காவது விரைவு தாக்குதல் படகுகள் படையின் பி 484 விரைவு தாக்குதல் படகை இந்திய மீன்பிடிப் படகுள்ள கடல் பகுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. 2022 செப்டம்பர் 27 ஆம் திகதி இரவு, P 484 என்ற படகு, பருத்தித்துறையில் இருந்து 26 கடல் மைல் தொலைவில், வட கடலில் மிதந்து கொண்டிருந்த இந்தியப் பல நாள் படகைக் கண்டறிந்து படகில் இருந்த 09 இந்திய மீனவர்களுக்கும் உணவு, பானம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியது.
அதன்படி, இன்று (2022 செப்டம்பர் 28,) காலை ஒன்பது (09) இந்திய மீனவர்களுடன், பாதிக்கப்பட்ட படகை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கடற்பரப்புக்கு P484 என்ற படகு மூலம் பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டு இந்திய கடலோர காவல் துறையின் எனீ பெசன்ட் கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பகுதியில் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது.