சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 12 பேர் கடற்படையினரால் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் மன்னார் ஒலுதுடுவாய் கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 22 ஆம் திகதி இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரையில் 2022 செப்டெம்பர் 22 ஆம் திகதி இரவு வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கஜபா நிருவனித்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரையில் தங்கியிருந்த குழுவினரை அவதானித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு நாட்டிலிருந்து வெளியேற தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு (02) ஆண்கள், மூன்று (03) பெண்கள் மற்றும் ஏழு (07) 18 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் வெடித்தலதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.