அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்று அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து கடந்த 2022 ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடல் எல்லையில் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வந்த அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கு சொந்தமான ஓஷன் சீல்ட் (Australian Border Force Cutter Ship - Ocean Shield) கப்பல் இன்று (2022ஆகஸ்ட் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான ஆள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இலங்கை கடற்படை, இந்து சமுத்திரப் பகுதியைப் பயன்படுத்தும் ஏனைய தரப்பினருடன் இணைந்து பல ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இதன்படி, கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 46 பேர் கொண்ட குழுவொன்று 2022 ஜூலை மாதம் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த நபர்களை கொண்ட அவுஸ்திரேலிய எல்லைப் படையின் ஓஷன் சீல்ட் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மேலும், அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குழுவொன்று, அந்தப் படைக்கு சொந்தமான கப்பலொன்று மூலம் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
2022 ஜூலை மாதம் 06 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இருந்து பல நாள் மீன்பிடிப் படகொன்றில் புறப்பட்டுச் சென்று அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற போது அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வந்த இந்த நபர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு பாசிக்குடா, அம்பாறை பிபில மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் கமாண்டர் கிறிஸ் வாட்டர்ஸ் (Chris Waters) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் இங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு, அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர், சட்டவிரோத ஆள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று (2022 ஆகஸ்ட் 05) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் உட்பட 2022 மே மாதம் முதல் இன்று வரை கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 183 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2013 ஒக்டோபர் மாதம் முதல் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு படகுகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அவுஸ்திரேலியாவில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிக்காது எனவும், அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் அந்நாட்டின் கொள்கையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார். புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அங்கீகரிக்கப்படாத கடல் வழி ஆட்களை கடத்துவது தொடர்பான கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த மேற்கு கடற்படை கட்டளை தளபதி, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து செயற்படுவதால், கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான ஆள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எனவே, கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதற்கு இடமில்லையெனவும், ஆட்கடத்தல்காரர்களின் தந்திரங்களில் சிக்கி, இவ்வாறான கடல் பயணங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இலங்கை கடற்படையானது வெளிநாடுகளுக்கு சட்டவிரோத குடியேற்றங்களை முற்றாகத் தடுக்கவும், அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவோரை கைது செய்யவும், மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களின் பாதுகாப்பிற்காக அவர்களைத் திருப்பி அனுப்பவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு முதல் (05 ஆகஸ்ட் 2022) இதுவரை மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஊடாக நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 1024 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டு (05 ஆகஸ்ட் 2022) இதுவரை கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 183 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக பதவியேற்கவுள்ள திரு. பால் ஸ்டீபன்ஸ், (Paul Stephens), இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கேன் உட்பட கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.