சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 பேர் கடற்படையினரால் கைது
இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை கடற்படையினர் 2022 ஜூன் 11 ஆம் திகதி நண்பகல் அம்பாறை ஒகந்த கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் (06) உட்பட 26 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 07 சிறுவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறாக உள்ளதுடன் மேலும் நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தமை மேலதிக ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 02 முதல் 60 வயதுடைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாணம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோருகிறது. அத்தகைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணை கிடையாது. மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுகிறார்கள். அதன் படி, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் மற்றும் 15 இலங்கையர்களைக் கொண்ட இரு குழுக்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 24 மற்றும் ஜூன் 9 ஆம் திகதிகளில் அவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பின்னர் சட்டப்பூர்வமாக நாட்டிற்கு குடிபெயர்வதற்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும்.
மேலும், பழமையான மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் தொடர்ந்தும் இவ்வாறான மனித கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான கப்பல்கள் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்பட்டால் அவர்களின் உயிருக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை பொதுமக்களை எச்சரித்துள்ளது.