இந்திய - இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி (SLINEX ) வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு இந்திய-இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி (SLINEX) 2022 மார்ச் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் கப்பல்துறையில் மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் நடைபெற்றது. குறித்த பயிற்சிக்காக இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படை கப்பல் சயுரல பங்கேற்றது.
9வது முறையாக நடைத்தப்பட்ட இந்த ‘SLINEX’ இருதரப்பு கடற்படை பயிற்சி, துறைமுக கட்டம் மற்றும் கடல் கட்டம் என இரண்டு கட்டங்களாக நடைபெற்றதுடன் இதில் இந்திய கடற்படையின் Corvette வகையில் 'INS KIRCH' மற்றும் Fleet support tanker வகையின் 'INS JYOTI' ஆகிய கப்பல்களுடன் பல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோனியர் வகை கடல் உளவு விமானமும் இணைந்தது.
அதன்படி, இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான தொடர்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த இருதரப்பு பயிற்சியின் துறைமுக கட்டம் மற்றும் அறிவு பரிமாற்றம் 2022 மார்ச் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்றது. கடற்படை அறிவு மற்றும் உத்திகளை பரிமாறிக் கொள்ளவும், இரு கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தவும் பல்வேறு கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் பின் 2022 மார்ச் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கிழக்கிந்திய வங்காள விரிகுடாவின் கடற்கரையில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குதல், கடற்படை வானூர்தி பயிற்சிகள் மற்றும் கடற்படை வரிசைகள் உட்பட கடல் மேற்பரப்பு மற்றும் வான்வழி படப்பிடிப்பு பயிற்சிகள் நடைபெற்றதுடன் மேலும், கப்பல், சரக்குகளை கையாளுதல், சிறப்பு கடல்சார் நடவடிக்கை பயிற்சிகள், கப்பல் அணுகல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) உத்திகள் போன்ற பல கடற்படை பயிற்சிகள் நடத்தப்பட்டன.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு கடற்படை நடவடிக்கை பயிற்சிகள் மூலம் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்த கூட்டு கடற்படை பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டன.