சீரற்ற வானிலை காரணத்தினால் மிதந்து வந்த 03 இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையால் மீட்பு
கடந்த தினங்களில் நிலவிய பலத்த காற்று காரணத்தினால் இலங்கை கடல் பகுதிக்கு மிதந்து வந்த 03 இந்திய மீன்பிடிப் படகுகள் வடமேற்கு கடற்கரையில் மற்றும் தெற்கு கடற்கரையில் வைத்து 2021 ஜூன் 17 ஆம் திகதி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
புத்தலம், பெரியபாடு கடலோரப் பகுதியில் 2021 ஜூன் 17 ஆம் திகதி அதிகாலை வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்கரையில் மிதந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். 2021 ஜூன் 17 ஆம் திகதி இலங்கை கடலோர காவல்படை தெவுந்தர கலங்கரை விளக்கத்திலிருந்து 9 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்த மற்றொரு இந்திய மீன்பிடிப் படகை கண்டுபிடித்தனர். இந்த இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மோசமான வானிலை காரணத்தினால் பல சந்தர்பங்களில் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கை கடல் பகுதிக்கு மிதந்து வந்துள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டில் 04 படகுகள் தலைமன்னார் மற்றும் உடப்புவ கடலோரப் பகுதிகளுக்கும், 2018 ஆம் ஆண்டில் 03 படகுகள் தலைமன்னர், மன்னார் மற்றும் உடப்புவ கடலோரப் பகுதிகளுக்கும், 2019 ஆம் ஆண்டில் 05 படகுகள் சிலாவத்துர, தெஹிவலை மற்றும் நெடுந்தீவு கடலோரப் பகுதிகளுக்கும் 2020 ஆம் ஆண்டில் 04 படகுகள் இரணவில, வென்னப்புவ, மன்னார் மற்றும் வலைபாடு பகுதிகளுக்கும் 2021 ஆம் ஆண்டில் மே மாதம் ஒரு படகு மன்னார் பகுதிக்கும் வந்தடைந்துள்ளது. அதன் படி 2017 ஆண்டு முதல் இது வரை 17 இந்திய மீன்பிடி படகுகள் இவ்வாரு இலங்கை கடல் பகுதிக்கு மிதந்து வந்துள்ளது.
மேலும்,வானிலை மாற்றம் மற்றும் பலத்த காற்று காரணத்தினால் படகுகளின் கயிறுகள் தளர்த்தப்படுவதோ அல்லது உடைந்துவிடுவதோ காரணமாகவும் கடல் நீரோட்டங்களின் விளைவுகள் காரணமாகவும் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்கரைக்கு மிதந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.