MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீ காரணத்தினால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதியை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது குறைந்து வருகிறது. இன்று காலை (2021 மே 27) கப்பலில் இருந்து கடும் புகை மற்றும் சிறிய தீப்பிழம்புகள் காணப்பட்டதுடன் அந்தக் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்கள் உட்பட பல்வேறு குப்பைகள் கடற்கரைக்கு மிதந்து வருவதால் கடற்கரையில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் அந்த பொருட்களின் நச்சு இரசாயனங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கவும் கடற்படை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் (MEPA) ஒருங்கிணைந்து சிறப்பு நடவடிக்கையொன்று தொடங்கியுள்ளது.
அதன்படி, தீ பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழும் பாகங்கள் மிதந்து வர அதிகமாக வாய்ப்புள்ள திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி 2021 மே 26 ஆம் திகதி தொடங்கிய கடற்கரை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதைத் தடுப்பதுக்கான சிறப்பு பாதுகாப்பு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் வெல்லவத்தை முதல் பானதுரை வரையிலான கடற்கரை பகுதியையும் உள்ளடக்கி செயல்படுத்தப்படும்.
MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணத்தினால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இன்று (2021 மே 27) நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு கழிவு அகற்றல் மற்றும் சமூக சுகாதாரம் விவகாரங்கள் பற்றிய மாநில அமைச்சர் திரு கலாநிதி நாலக கொடஹேவா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு. ஹர்ஷான் டி சில்வா, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி, வழக்கறிஞர் திருமதி தர்ஷனி லஹந்தபுர, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட அரசு அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் இலங்கை காவல்துறை அதிகாரிகளின் பங்கேற்புடன் உஸ்வெடகெய்யாவ மாலிமா மண்டபத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி கடற்கரைக்குச் சென்று கடலோர சூழலில் சுற்றுச்சூழல் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து கூடுதல் வழிமுறைகளை வழங்கினார்.
இப்போது இலங்கை கடற்படை கப்பல் 'கஜபாஹு' மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கடல் மாசு கட்டுப்பாட்டு கப்பல்களான ‘வஜ்ரா’ (ICGS Vajra) மற்றும் ‘வைபாவ்’ (ICGS Vaibhav) ஆகியவை தீ பிடித்த MV X-PRESS PEARL கப்பல் கிடந்த கடல் பகுதியில் சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த பேரழிவு சூழ்நிலையில் உதவ வந்த இந்திய கடலோர காவல்படையின் ‘வஜ்ரா’ (ICGS Vajra) கப்பல் தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற AFFF, OSD மற்றும் DCP இனத்தைச் சேர்ந்த எரியக்கூடிய தீவன இரசாயனங்கள் பொதியொன்று 2021 மே 26 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவந்து கடற்படையிடம் ஒப்படைத்து மீண்டும் தீ பிடித்த கப்பல் இருந்த கடல் பகுதிக்கு சென்றது.
மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஒரு டோர்னியர் விமானம் (Dornier) முந்தைய நாள் மற்றும் இன்று (2021 மே 27) தீ பிடித்த கப்பல் உள்ள கடல் பகுதியை உள்ளடக்கி வான்வழி ஆய்வு சுற்றுப்பயணத்தை நடத்தியதுடன் கடல் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை வழங்கியது.
மேலும், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து தீ பிடித்த கப்பலில் இருந்து கடற்கரைக்கு மிதந்து வருகின்ற கொள்கலன்கள் உட்பட பல்வேறு குப்பைகளை அகற்ற தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.