இலங்கை கடற்படை கப்பல் படையணியுடன் இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தை தொடங்கிய அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சுமார் 10656 கடல் மைல்கள் (சுமார் 19734 கி.மீ) நீண்ட பயணத்திற்குப் பிறகு இன்று (2022 நவம்பர் 02) காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் குறித்த கப்பலை வரவேற்கும் நிகழ்வுக்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கௌரவ ஜூலி சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன உட்பட கௌரவ அதிதிகள் கலந்து கொண்டனர்.
கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிப்பதற்கான கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க கடலோர காவல்படையினரால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட 'டக்ளஸ் முன்ரோ' (EX USCGC Douglas Munro) என்ற அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் 'சியாட்டில்' துறைமுகத்தில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை தளத்தில் இடம்பெற்றது, அன்றிலிருந்து குறித்த கப்பல் P627 என்ற கொடி இலக்கத்தின் கீழ் இலங்கை கடற்படையுடன் இணைந்தது.
இதற்கு முன் 2005 இல் இலங்கை கடற்படைக் கப்பல் 'சமுதுர' (P 621) மற்றும் 2018 இல் இலங்கை கடற்படைக் கப்பல் 'கஜபாஹு' (P 626) அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தினால் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டதுடன் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்காக அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட மூன்றாவது கப்பல் P627 ஆகும்.
‘Hamilton Class High Endurance Cutter’ வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பலாக இலங்கை கடற்படையால் கையகப்படுத்தப்பட்ட இக்கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 29 கடல் மைல் வேகம் கொண்டது மற்றும் ஒரே நேரத்தில் குறைந்தது 14000 கடல் மைல் தூரத்தை இடைமறிக்கும் செயல்பாடுகள் கொண்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வசதிகள் கொண்டுள்ளதுடன் 187 கடற்படையினர்கள் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். மேலும், இந்த கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டபோது, நாட்டின் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றின் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியது.
P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் 2021 அக்டோபர் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், P627 இன் நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், கப்பலின் முதல் பணியாளர்கள் மொத்தம் 130 பேர் சுமார் 10 மாதங்கள் கப்பலில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இலங்கை கடற்படையின் பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு இக் கப்பல் நவீனமயமாக்கப்பட்டது.
P 627 கப்பலின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நவீனமயமாக்கலை முடித்து, , 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி அதன் சொந்த துறைமுகத்திற்குச் செல்லத் தொடங்கியது.
அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட P 627 என்ற கப்பல், பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக சுமார் இரண்டு மாத கால நீண்ட பயணத்தின் பின்னர் இன்று (02 நவம்பர் 2022) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் பயணம் இலங்கை கடற்படையின் வரலாற்றில் கடற்படைக் கப்பல் ஒன்றின் மிக நீண்ட பயணமாக அமைந்தது. இந்த நீண்ட கடல் பயணத்தின் போது, கப்பல் ஹவாயில் உள்ள ஹொனலுலு (Honolulu) துறைமுகம், குவாமில் (Guam) உள்ள அப்ரா (Apra) துறைமுகம், பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா (Manila) துறைமுகம் மற்றும் சிங்கப்பூரின் சாங்கி (Changi) ஆகிய இடங்களுக்கு சென்று கப்பலுக்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொண்டது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், P627 கப்பலின் நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்க, கடற்படையின் மரபுப்படி கடற்படைத் தளபதியிடம் அறிக்கை செய்த பின்னர், கடற்படைத் தளபதி கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்களை P627 கப்பலின் ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக அழைத்துச் சென்றார். மேலும், கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட கௌரவ அதிதிகளுக்கு P627 கப்பலின் கட்டளைத் தளபதி நினைவுச் கின்னங்களையும் வழங்கினார்.
இலங்கையின் நிலப்பரப்பின் ஏழு மடங்கு பெரிய இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திலுள்ள கடல் வளங்களைப் பாதுகாத்தல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கப்பல் பாதைகளுக்கு பாதுகாப்பு வழங்குதல். எதிர்காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளும் தேசிய அபிலாஷையை அடைவதற்காக இந்த கப்பலை திறமையாக பயன்படுத்த கடற்படை எதிர்பார்க்கிறது.
மேலும், இலங்கை கடற்படை நாட்டின் முதலாவது பாதுகாப்பு வளையமாக இருப்பதால், நாட்டின் கடல் வலயத்தின் பாதுகாப்பின் தலைவராக செயற்படுவதற்கு அதிக நடமாட்டம் மற்றும் செயற்பாட்டுத் திறன் கொண்ட கப்பல்களை பொருத்துவது அவசரத் தேவையாகும். இத்தகைய உயர் வழிசெலுத்தல் திறன் கொண்ட கப்பல்களை கையகப்படுத்துவதன் மூலம், நாட்டின் கடல்சார் பாதுகாப்பு அபிலாஷைகளை திறமையாகவும் நிறைவேற்ற முடியும்.
மேலும், கொழும்பு துறைமுகத்திற்கு P 627 ஐ வரவேற்கும் நிகழ்விற்காக, இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், கடற்படை பிரதானி, ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக்க குமார உட்பட முக்கிய விருந்தினர்கள் மற்றும் கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் P 627 கப்பலின் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.