கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவுற்றது
பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜாத் கான் நியாசியின் (M Amjad Khan Niazi) அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 பெப்ரவரி 21 அன்று பாகிஸ்தானுக்குச் சென்றதுடன் இந்த உத்தியோகபூர்வ விஜயத்துக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து, 2022 பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்த கடற்படைத் தளபதியை, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜாத் கான் நியாசி கடற்படை மரபுகளின்படி அன்புடன் வரவேற்றார்.
பின்னர், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வைத்து கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களை சந்தித்தார். அங்கு பாகிஸ்தான் பிரதமரின் அன்பான வரவேற்பைப் பெற்ற இலங்கை கடற்படைத் தளபதி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
இலங்கை கடற்படைத் தளபதி தனது விஜயத்தின் போது, கௌரவ பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி (Dr. Arif Alvi) அவர்களை சந்தித்து சுமுகமாக கலந்துரையாடினார்.
மேலும், இலங்கை கடற்படைத் தளபதி பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர், இராணுவத் தளபதி, கடல்சார் தொழில்நுட்ப வளாகத்தின் பணிப்பாளர் நாயகம், பாகிஸ்தான் கடற்படை படையணிகளின் தளபதி, பாகிஸ்தான் கடலோரக் காவல்படையின் தளபதி, தளபதி கரச்சி பகுதி, கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நிர்வாக இயக்குனர் (கப்பல்துறை மற்றும் பொறியியல் நடவடிக்கைகள்) போன்ற நாட்டின் பல சிரேஷ்ட கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்தித்து, பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் நடைபெற்ற பயிற்சி அமர்வில் உரையாற்றினார். மேலும் பாகிஸ்தான் கடற்படை அகாடமி, பாகிஸ்தான் கூட்டு கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையம், பல கடற்படைப் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களையும் பார்வையிட்டார். இந்த விஜயங்களின் போது கடற்படை தளபதி பாகிஸ்தான் கடற்படை பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வரும் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளையும் சந்தித்து பேசினார் .
மேலும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாகா (Wagah) எல்லையில் நடைபெறும் வழக்கமான கொடியிறக்கும் சம்பிரதாயத்தை (Flag Lowering Ceremony) நேரில் சென்று பார்வையிட்டார்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்புகள் நட்பு, ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும், இது பொதுவான பிராந்திய கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிப்பதற்கும் பிராந்திய கடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவும்.
புகைப்பட உபயம்: பாகிஸ்தான் கடற்படை