அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அன்புடன் வரவேற்றார்.
கடற்படை செயல்பாட்டு அறையின் செயல்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கவுரையைத் தொடர்ந்து, கடற்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகள், செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தயார்நிலை ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட்டன. இங்கு, குறிப்பாக கடல்சார் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதில், “Ratama Ekata” திட்டத்தை வெற்றிகரமாகவும் தடையின்றியும் செயல்படுத்துவதில் கடற்படையின் முக்கிய பங்கு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
சமீபத்திய இயற்கை அனர்த்தத்தின் போதும், தடையற்ற கடல்சார் கண்காணிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதுடன், தேசிய அளவில் அனர்த்த மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அதேவேளை, இலங்கை கடற்படை “Ratama Ekata” திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான செயல்பாடுகளை எந்தத் தடையும் இன்றி மேற்கொண்டமை குறித்து பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இலங்கையின் பிராந்திய கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் இதன் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன. மேலும், கடற்படையின் தேடல் மற்றும் மீட்புப் பணிகள், மீன்பிடி மற்றும் கடலோர சமூகங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், கடல் சூழலை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையைப் பாராட்டிய பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பிற்கு “Ratama Ekata” திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்வதில் கடற்படையின் தொழில்முறைத் தன்மை, மீள்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை அவர் பாராட்டியதுடன், செயல்பாட்டு தயார்நிலை, செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான தேவையான மேலதிக வழிகாட்டுதல்களையும் வழங்கினார். மேலும், நாட்டின் கடல்சார் பிரதேசத்தை பாதுகாப்பதிலும் முக்கிய தேசிய முயற்சிகளை ஆதரிப்பதிலும் இலங்கை கடற்படையின் பங்கில் அரசாங்கத்தின் நம்பிக்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடக ஆதரவு - defence.lk






