கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா 2025 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் கடற்படைத் தலைமையகத்தில், ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நியமனக் கடிதத்தை இன்று (2025 டிசம்பர் 23) அதிகாரப்பூர்வமாக வழங்கி,தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, 1992 ஆம் ஆண்டு ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவாலா பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10 வது ஆட்சேர்ப்பின் மாணவச் சிப்பாய் அதிகாரியாக இலங்கை கடற்படையின் நிர்வாகக் கிளையில் சேர்ந்தார். அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து 1994 ஆம் ஆண்டு சப்-லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்ட அவர், 1999 ஆம் ஆண்டு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் சப்-லெப்டினன்ட் தொழில்நுட்பப் பாடநெறியையும், 2002 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சிறப்பு மூழ்காளர் பாடநெறியையும் வெற்றிகரமாக முடித்தார். சீனாவில் உள்ள கடற்படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியையும், இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியையும் முடித்தார். ஆஸ்திரேலியாவின் வொல்லொங்காங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கையில் முதுகலைப் பட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், தனது தொழில் வாழ்க்கையில் சீராக பதவியுயர்வு பெற்றுள்ளார், மேலும் ஜனவரி 2024 இல் ரியர் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களித்த அதே வேளையில், எதிரிக்கு எதிரான துணிச்சலுக்காக ஒன்பது முறை ரணசுர பதக்கத்தை பெற்றுள்ள ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, அவரது மதிப்புமிக்க சேவை, குறைபாடற்ற தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக உத்தம சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.