இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் (International Maritime Boundary Line meeting), காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடற்படையின் INS Sukanya கப்பலில் 2025 நவம்பர் 11 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படை திணைக்களங்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக இந்தக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் 35வது முறையாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படைக் தூதுக்குழுவும், இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் (Rear Admiral Satish Shenai – Flag Officer Commanding Tamil Nadu and Puducherry Naval Area) தலைமையில் இந்திய கடற்படைக் தூதுக்குழுவும் பங்கேற்றன.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் கடல் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் முந்தைய சர்வதேச கடல் எல்லைக் கூட்டங்களின் போது விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் வட மத்திய கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் அருண வீரசிங்க, உள்ளிட்ட இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டதுடன், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (Captain Anand Mukundan) அவர்களும் இதில் பங்கேற்றார்.