பாணதுறை பிரதமர் பெண்கள் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

பாணதுறை பிரதமர் பெண்கள் கல்லூரியின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12 ஆம் திகதி பாணதுறை பொது மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றதுடன், அதன் நிறைவு விழாவின் முக்கிய நிகழ்விற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்காக கடற்படைத் தளபதியை பாணதுறை பிரதமர் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி எம்.கே.எம்.என். பெர்னாண்டோ உட்பட ஆசிரியர் குழாத்தினால் வரவேற்றதன் பின்னர், கல்லூரியின் இசைக் குழுவினர் மற்றும் மாணவச் சிப்பாய் படை அணியினால் கடற்படைத் தளபதியை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். குறித்த கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவியான திருமதி அனுஷா பானகொடவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

விளையாட்டு விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு விழாவில் வெற்றிச் சின்னங்களை வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தன்னை அழைத்ததற்காக கல்லூரி அதிபர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, விளையாட்டு, கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகள் மூலம் மாணவர்கள் தங்கள் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தி, கல்லூரியின் கொடியை உயர்த்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும் வாய்ப்பு உள்ளது என்றும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல குடிமக்களாக தங்கள் குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டிற்கு சேவை செய்ய அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விளையாட்டு மற்றும் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கின்றது என்றும், எதிர்காலத்தில், மாணவிகள் கடற்படையை மட்டுமல்ல, முப்படையினையும் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் மேலும் கூறினார்.

மேலும், விழாவில் உரையாற்றிய பின்னர், கடற்படைத் தளபதி கல்லூரியின் இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு விழாவின் நிறைவில் வெற்றிச் சின்னங்களை வழங்கினார்.