க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" திட்டத்துடன் இணைந்து இன்று (2025 பெப்ரவரி 09) மேற்கு மற்றும் தென் பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு கடற்படை முழுமையாகப் தனது பங்களிப்பை வழங்கியது.

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் பிரதான பங்காளியாக, இலங்கை கடற்படை தீவின் அனைத்து கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு பங்களித்து வருகிறது. அதன்படி, இன்று (2025 பெப்ரவரி 09) கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மட்டக்குளி காக்கை தீவில் நடைபெற்ற பிரதான கடற்கரை துப்பரவுத் திட்டத்துடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தின், துறைமுக நகரம், காலி முகத்திடல், கொழும்பு துறைமுகம், வெள்ளவத்தை, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய கடற்கரைகளில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரைச் சுத்திகரிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இவ் வேலைத்திட்டங்களுக்கு கடற்படையினரால் முழுமையான பங்களிப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, இத்திட்டத்தின் மூலம் கடற்கரையில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக், பொலித்தீன், திண்மக் கழிவுகள் உள்ளிட்ட பெருந்தொகையான குப்பைகளை சேகரித்து கடற்கரையில் இருந்து அகற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

மேலும், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 08 மற்றும் 09 ஆம் திகதிகளில், க்லீன் ஶ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் மன்னார் வாங்காலை, தால்பாடு முதல் ஓலுத்துடாய் வரையிலும், தலைமன்னார் கலங்கரை விளக்கத்திற்கு அருகாமையில் இருந்து பியர்கம வரையிலும் கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை கடற்படையினர் மேற்கொண்டனர்.