கடற்படை சமூக நலத் திட்டம் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைக்கும் நிகழ்வு தொடங்கியது
அனுராதபுரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 2024 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படையால் திறந்து வைக்கப்பட்டன. அனுராதபுரம் நாச்சாதூவ முஸ்லிம் மகா வித்தியாலயம், மத்திய நுவர கம்பலாத பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகொல்லேவ பாலர் பாடசாலை மற்றும் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ரந்துவ மீனவர் சங்க மண்டபம் ஆகிய இடங்களில் இந்த புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் 31 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் திட்டம் நீண்டகால சிறுநீரக நோய் பொதுவாக பதிவாகும் பகுதிகளை மையமாகக் கொண்டு சுகாதார அமைச்சின் முன்முயற்சியின் கடற்படை தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி, இந்த விசேட திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ, பதவிய, கல்நேவ, தம்புத்தேகம, கெக்கிராவ, தலாவ, கஹட்டகஸ்திகிலிய, நொச்சியாகம, ஹொரோவ்பதான, திறப்பனை ஆகிய பிரதேச செயலகங்களில் 28 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
கடற்படையின் இந்த சமூக நலத் திட்டத்தின் கீழ், தற்போது 988 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், 15 கடல்நீரை நன்னீராக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், 29 மருத்துவத் தரமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், 03 நடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. முழு தீவு முழுவதும் 1035 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுவதன் மூலம், நாட்டிலிருந்து ஆபத்தான சிறுநீரக நோயை நீக்குவதற்கு ஒரு தனித்துவமான பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.