அடிப்படை நோக்குநிலைப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 13 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு

அடிப்படை நோக்குநிலை பாடநெறியை (மருத்துவம்) 02/2024 வெற்றிகரமாக முடித்த பதின்மூன்று (13) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2024 அக்டோபர் 11) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் (NMA) பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்படி, வெற்றிகரமாக தமது பயிற்சியை முடித்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது உள்வாங்கலைச் சேர்ந்த பதின்மூன்று (13) வைத்திய அதிகாரிகள், அவர்களின் பெற்றோர், ஆலோசகர்கள் மற்றும் பயிற்சி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பீடத்தின் பயிற்சி மைதானத்தில் பெருமையுடனும் மரியாதையுடனும் அணிவகுத்துச் சென்றனர்.

அணிவகுப்புக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப் அவர்களிடமிருந்து அடிப்படை நோக்குநிலை பாடநெறியின் (மருத்துவம்) 02/2024 சிறந்த அதிகாரிக்கான வெற்றிக் கிண்ணத்தை கடமையாற்றும் உப லெப்டினன்ட் (மருத்துவம்.) டி.பி. ஜயதிலக பெற்றுக்கொண்டார்.

அங்கு உரையாற்றிய கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் ரோஹன் ஜோசப், முதலில் அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர், பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டின் ஊடாக தொழில்சார் திறனை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் கடற்படையின் பாத்திரத்தை திறமையாகவும், திறம்படவும் செய்வதற்கு கடற்படை உறுதியுடன் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டுமென கடற்படை எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார். கொமடோர் ரொஹான் ஜோசப் அவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக தமது பிள்ளைகளை கடற்படையில் இணைந்து கொள்ள ஊக்குவித்த அவர்களின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார்.

கடற்படை இசைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளால் நிகழ்வு மிகவும் வண்ணமயமானது. இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் குழு மற்றும் வெளியேறும் அதிகாரிகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.