சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பயிற்சி பாய்மர போர்க்கப்பலான 'PO LANG' உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான(Chinese People’s Liberation Army Navy Sail Training Warship) 'PO LANG' இன்று (2024 அக்டோபர் 8,) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'PO LANG' பாய்மரப் பயிற்சிக் கப்பல் 86 மீற்றர் நீளம் கொண்டதுடன் 35 பயிற்சி அதிகாரிகள் உட்பட மொத்தம் 130 கடற்படையினர்களைக் கொண்டுள்ளது.
இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் Ma Wenyong மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (08 அக்டோபர் 2024) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடுசெய்யப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்கவும் உள்ளனர்.
மேலும், இந்த பயிற்சி பாய்மரக் கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் கடற்படையினர் இலங்கையில் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவூட்டும் வேலைத்திட்டமொன்றும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 'PO LANG' என்ற பயிற்சி பாய்மரப் போர்க்கப்பல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.