இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2024 தொடங்கியது

இலங்கை தொண்டர் கடற்படையின் 2024 வருடாந்த பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வு 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி வெலிசறையில் உள்ள தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி கொமடோர் சுசந்த தர்மசிறி அவர்களின் அழைப்பின் பேரில் தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண தலைமையில் நடைபெற்றது.

தொண்டர் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற இந்த பயிற்சி முகாமில் இந்த ஆண்டில் 42 அதிகாரிகள் மற்றும் 408 மூத்த மற்றும் இளைய மாலுமிகள் உட்பட 450 தன்னார்வ கடற்படையினர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், 2024 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமான இந்த வருடாந்த பயிற்சி முகாம் 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் நடத்தப்படுகின்ற தொண்டர் கடற்படையின் பிரிவு ஆய்வுக்குப் பின்னர் அணிவகுப்பொன்று நடைபெற்று வருடாந்த பயிற்சி முகாம் நிறைவடையும்.

மேலும், இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் எம்.பீ.என்.ஏ பேமரத்ன உட்பட தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், வருடாந்த பயிற்சி முகாமில் பங்குபற்றும் பயிற்சி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியில் ஈடுபடும் சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர் கலந்துகொண்டனர்.