கடற்படையினரால் நவீனமயமாக்கப்பட்ட "நெடுந்தாரகை" பயணிகள் போக்குவரத்துக் கப்பல் இயக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தின், நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஜெட்டி இடையிலான பயணிகள் போக்குவரத்து வசதிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பயன்படுத்தப்பட்ட 'நெடுந்தாரகை' என்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பல் கடற்படையினரால் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை இலங்கை கடற்படையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நெடுந்தாரகை என்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பலின் திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, குறித்த திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் துரித கதியில் நிறைவடைந்ததையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிப்பு நிகழ்வு 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நெடுந்தீவு ஜெட்டியில் இடம்பெற்றது.
மேலும், கடற்படையின் கடல்சார் பொறியியல் பணிப்பாளர் ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷ உட்பட சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படை அதிகாரிகள், வடமாகாண சபை மற்றும் நெடுந்தீவு பிராந்திய சபை அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.