அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2024 ஜூலை 23,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள Arleigh Burke class of guided missile destroyers வகையின் ‘USS Michael Murphy’ கப்பல் நூற்று ஐம்பத்தைந்து (155) மீட்டர் நீளம் கொண்டுள்ளதுடன் மொத்தம் முந்நூற்று இருபத்தி மூன்று (323) கடற்படையினர்களைக் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald பணியாற்றுகிறார்.

அத்துடன், ‘USS Michael Murphy’ கப்பலின் கட்டளை அதிகாரி Commander Jonathan B. Greenwald மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று (2024 ஜூலை 23) நடைபெற்றதுடன் இந் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

மேலும், ‘USS Michael Murphy’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் ஒட்டுமொத்த கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர், மேலும் ‘USS Michael Murphy’ என்ற கப்பல் 26 ஜூலை 2024 திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.