இரண்டாம் உலகப் போரின் போது கிழக்குக் கடலில் மூழ்கிய ‘HMS Hermes’ என்ற விமானம் தாங்கி கப்பலில் கடற்படை ஒரு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்றை நடத்தியது

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் விமான தாக்குதல் காரணத்தினால் மட்டக்களப்புக்கு அப்பால் கிழக்கு கடலில் மூழ்கிய அரச கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘HMS Hermes’கப்பலில் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் பகுதியில் சிறப்பு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்று கடற்படை சுழியோடி பிரிவால் 2024 ஜூன் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் இந் நிகழ்வில் கழந்துகொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு) ஆகியோர் ‘HMS Hermes’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்களை நினைவு கூறும் வகையில் பொப்பி மலர்க்கொத்துகளை வைத்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது, 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி கொழும்பில் ஜப்பானியர் குண்டுவீச்சைத் தொடர்ந்து, திருகோணமலை தென் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அரச கடற்படையின் HMS Hermes மற்றும் HMAS Vampire ஆகிய கப்பல்கள் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் திகதி வான்வழித் தாக்குதல்களால் மூழ்கடிக்கப்பட்டன.

கடல் மட்டத்தில் இருந்து 55 மீற்றர் ஆழத்தில் மூழ்கிய HMS Hermes கப்பலில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு சுழியோடி பயிற்சி சுழியோடி பிரிவின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் சுழியோடி நிபுணர் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. HMS Hermes கப்பல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் பகுதியில் கடற்படைத் தளபதியும், முன்னாள் கடற்படை தளபதி இருவரும் ஒரே நேரத்தில் இணைந்து ஆய்வுப் பயிற்சியை மேற்கொண்ட மற்றும் கப்பல் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தக் கப்பல் உட்பட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்கள் மற்றும் கடல்சார் கலைப்பொருட்கள் கிழக்குக் கடலில் திருகோணமலை துறைமுகத்திலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன. கடற்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு சுழியோடி பயிற்சிகள் திருகோணமலையை சூழவுள்ள கடற்பரப்பில் சுழியோடி சுற்றுலாவை பெரிதும் மேம்படுத்தும், அதன் மூலம் தீவின் சுழியோடி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும்.